தமிழ் சமகால வேதாகமம் — 2022 (Biblica மூல உரை)

சங்கீதம் 45

இந்த அதிகாரத்தைத் தமிழில் வாசிக்கலாம். Divine Threads ஆய்வுகள் பின்னர் சேர்க்கப்படும்.

1அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது, அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது; என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல்.
2மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே, இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால், உமது உதடுகளில் கிருபை பொழிகிறது.
3வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும்.
4உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர, உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்; உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும்.
5உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும்.
6இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.
7நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.
8உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும், கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது.
9உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.
10மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு.
12தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள்.
13இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது.
14அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்; அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள் அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள்.
15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள்.
16உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர்.
17நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள்.
Original work: Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™
பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc.
Original work: Biblica® Open Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission for the original work. This independent Divine Threads reading adaptation is not a Biblica-branded publication or endorsement.

The original Bible translation is available under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible. Source and full copyright and trademark requirements. Changes in this Divine Threads adaptation: reading text is arranged in verse rows and source HTML, navigation, editorial headings, introductions and note popups are omitted. Original Scripture wording and combined verse labels are retained. This adaptation of Scripture remains under CC BY-SA 4.0; Divine Threads research studies are separately authored.