தமிழ் சமகால வேதாகமம் — 2022 (Biblica மூல உரை)

சங்கீதம் 44

இந்த அதிகாரத்தைத் தமிழில் வாசிக்கலாம். Divine Threads ஆய்வுகள் பின்னர் சேர்க்கப்படும்.

1இறைவனே, வெகுகாலத்திற்குமுன் எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்; அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம்.
2நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி, எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்; நீர் அந்நாட்டினரை தண்டித்து, எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர்.
3அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை, அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை; நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும் உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.
4இறைவனே, நீரே என் அரசன்; யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.
5உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி, உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.
6என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை, என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை;
7ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து, எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.
8நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.
9இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்; நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.
10எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்; எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.
11செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்; நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர்.
12நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்; அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.
13எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்; எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர்.
14நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்; மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள்.
15நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்; என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது.
16என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும் பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.
17நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்; உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்; ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.
18எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை.
19ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்; காரிருளினால் எங்களை மூடினீர்.
20எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால், அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால்,
21இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ? அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே.
22ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்; அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.
23யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்? விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும்.
24நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?
25நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்; எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.
26நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.
Original work: Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™
பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc.
Original work: Biblica® Open Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission for the original work. This independent Divine Threads reading adaptation is not a Biblica-branded publication or endorsement.

The original Bible translation is available under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible. Source and full copyright and trademark requirements. Changes in this Divine Threads adaptation: reading text is arranged in verse rows and source HTML, navigation, editorial headings, introductions and note popups are omitted. Original Scripture wording and combined verse labels are retained. This adaptation of Scripture remains under CC BY-SA 4.0; Divine Threads research studies are separately authored.