தமிழ் சமகால வேதாகமம் — 2022 (Biblica மூல உரை)

சங்கீதம் 80

இந்த அதிகாரத்தைத் தமிழில் வாசிக்கலாம். Divine Threads ஆய்வுகள் பின்னர் சேர்க்கப்படும்.

1இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே, எங்களுக்குச் செவிகொடும். கேருபீன்களுக்கு இடையில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே,
2எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும். உமது வல்லமையை எழச்செய்து, எங்களை இரட்சிக்க வாரும்.
3இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்கள் மன்றாடும்போது எவ்வளவு காலத்திற்கு கோபங்கொண்டிருப்பீர்?
5நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்; நீர் அவர்களை நிறைய கண்ணீரைப் பருகும்படிச் செய்தீர்.
6நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்; எங்கள் பகைவர் எங்களை ஏளனம் செய்யவிட்டீர்.
7சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; நாங்கள் இரட்சிக்கப்படும்படி உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.
8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்; பிற நாட்டு மக்களைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.
9நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்; அது வேர்விட்டு நாடெங்கும் படர்ந்தது.
10அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன; அதின் கிளைகளால் வலிமையான கேதுரு மரங்களும் மூடப்பட்டன.
11அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும், தன் தளிர்களை நதி வரைக்கும் பரப்பியது.
12நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்? அதைக் கடந்துபோகிற எல்லாருமே இப்போது அதின் பழங்களைப் பறிக்கிறார்களே.
13காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன; வயல்வெளியின் உயிரினங்கள் அதில் மேய்கின்றன.
14சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும், பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பாரும், இந்தத் திராட்சைக் கொடியைக் கவனியும்,
15உமது வலதுகரம் நாட்டிய வேரையும், உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த உமது மகனையும் காத்துக்கொள்ளும்.
16உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது; உமது முகத்தின் கண்டிப்பான பார்வையினால் உமது மக்கள் அழிகிறார்கள்.
17உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல், உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த மானிடமகன்மேல் அமரச்செய்யும்.
18அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், நாங்கள் உமது பெயரைச் சொல்லி வழிபடுவோம்.
19சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; நாங்கள் இரட்சிக்கப்படும்படி உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.
Original work: Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™
பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc.
Original work: Biblica® Open Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission for the original work. This independent Divine Threads reading adaptation is not a Biblica-branded publication or endorsement.

The original Bible translation is available under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible. Source and full copyright and trademark requirements. Changes in this Divine Threads adaptation: reading text is arranged in verse rows and source HTML, navigation, editorial headings, introductions and note popups are omitted. Original Scripture wording and combined verse labels are retained. This adaptation of Scripture remains under CC BY-SA 4.0; Divine Threads research studies are separately authored.